கோலாலம்பூர், மார்ச்.23-
2022 ஆசிய சாம்பியனான லீ ஸீ ஜியா ஏப்ரல் 8 முதல் 13 ஆம் தேதி வரை சீனாவின் நிங்போவில் நடைபெறும் 2025 ஆசியப் பூப்பந்து போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
உலக பூப்பந்து சம்மேளனத்தின் (BWF) இணையத்தள விவரங்களின் அடிப்படையில் உலகின் எட்டாவது தர வரிசை வீரரான ஸீ ஜியா விலகிக் கொள்ளும் பட்டியலில் இருக்கும் நிலையில் அந்த கேள்வி எழுந்துள்ளது.
தனது வலது கணுக்கால் தசைநார் காயம் காரணமாக, ஸீ ஜியா இன்று முடிவடையும் சுவிஸ் பொது பூப்பந்து போட்டியில் இருந்து முன்னதாக விலகினார்.
ஸீ ஜியாவைத் தவிர, தேசிய கலப்பு இரட்டையர் ஜோடியான சென் டாங் ஜி-தோ ஈ வெய்யும் ஆசியப் பூப்பந்து போட்டியில் இருந்து விலகும் பட்டியலில் உள்ளனர்.
இருப்பினும், இது தொடர்பாக மலேசிய பூப்பந்து சங்கம் (பிஏஎம்) அல்லது லீ ஸீ ஜியாவின் குழு இதுவரை எந்த உறுதியான தகவலையும் அறிக்கையையும் வெளியிடவில்லை.