இஸ்மாயில் சப்ரியிடம் 5 மணி நேரம் விசாரணை

புத்ராஜெயா, மார்ச்.24-

லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் SPRM தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை 5 மணி நேரம் விசாரணைக்கு ஆளாகினார்.

ஆறாவது நாளாக நடைபெற்ற விசாரணையில், 65 வயதுடைய அந்த முன்னாள் பிரதமர், பிற்பகல் 3.04 மணியளவில் எஸ்பிஆர்எம் தலைமையகத்தை விட்டு வெளியேறினார்.

எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்கள் அருகில் தனது டொயோட்டா வெல்பைஃயர் வாகனத்தை நிறுத்திய இஸ்மாயில் சப்ரி, அனைவருக்கும் ஹரிராயா பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

எனினும் அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணை நாளை தொடருமா? தொடராதா? என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஒரு வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் எஸ்பிஆர்எம்மின் விசாரணைப் பிடியில் இருந்து வரும் இஸ்மாயில் சப்ரி, ஒரு சந்தேக நபராக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

இஸ்மாயில் சப்ரி, செய்தியாளர்களை நோக்கி ஹரிராயா வாழ்த்துகளைக் கூறியதால், இவ்வாரத்தில் அவருக்கு எதிரான விசாரணை நடைபெறாது என்று கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS