சுங்கை பட்டாணி, மார்ச்.24-
கெடா, பெடோங், செமெலிங்கில் உள்ள AIMST (ஏம்ஸ்ட்) பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்ததாக ஓர் இந்திய மாணவன், கெடா, சுங்கைப்பட்டாணி, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
19 வயது B. வசீஹரன் என்ற அந்த மாணவன், நீதிபதி ரொஸ்லான் ஹாமிட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
AIMST பல்கலைக்கழகத்தின் கழிப்பறை முன்புறம், கடந்த மார்ச் 17 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் 19 வயது மாணவி P. கீர்தனா என்பவரைக் கத்தியால் குத்தி, கொலை செய்ய முயற்சி செய்ததாக வசீஹரன் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
அந்த மாணவி தனது காதலை நிராரித்து விட்டதாகக் கூறி, ஆவேசமாகச் செயல்பட்ட அந்த மாணவன், சம்பந்தப்பட்ட மாணவியைப் பல முறை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவி தனது தோழிகளுடன் பல்லைக்கழக நூலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தோன்றிய அந்த மாணவன், இந்த தாக்குதலை நடத்தியதுடன் ஆவேசமாகச் செயல்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த மாணவனும் காயமுற்றார். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் அந்த மாணவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த மாணவன் விசாரணை கோரியுள்ளான். அந்த மாணவன், சம்பந்தப்பட்ட மாணவிக்கு இடையூறு கொடுக்கலாம் என்பதால் அவரை ஜாமீனில் விடுவிக்கக்கூடாது என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் முகமட் பிஃட்ரி அஸிஸான் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
சம்பவத்தின் போது அந்த மாணவன் மிக ஆவேசமாக நடந்து கொண்ட முறை குறித்தும், முகமட் பிஃட்ரி அஸிஸான், நீதிமன்றத்தில் விவரித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவனுக்கு ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கு விசாரணை வரும் மே 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.