கோலாலம்பூர், மார்ச்.24-
மலேசியாவின் முன்னணி கலப்பு இரட்டையர் ஜோடியான சென் டாங் ஜீ-டோ ஈ வெய் ஜோடியின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. மலேசிய பேட்மிண்டன் சங்கம் (BAM) குழுக் கூட்டத்தில் அவர்களின் கூட்டணி குறித்து விவாதிப்பதே அதற்குக் காரணம். ஏப்ரல் 8-13 வரை சீனாவின் நிங்போவில் நடைபெறும் ஆசிய பூப்பந்து போட்டியில் இருந்து டாங் ஜீ-ஈ வெய் திடீரென விலகியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அவர்களின் பிளவு குறித்து ஆரூடங்கள் பரவியுள்ளன.
செயல்திறன் பணிக்குழு குழுவின் தலைவரும், பிஏஎம் இன் தற்காலிகத் தலைவருமான டத்தோ வி. சுப்பிரமணியம், இருவரும் உள் பிரச்சினைகளைக் கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், பயிற்சி குழுவின் அறிக்கையை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே அவர்களின் எதிர்காலம் குறித்த எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
மதிப்புமிக்க போட்டியாக வர்ணிக்கப்படும் அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் மலேசிய வரலாற்றில் தேசிய அணியின் அடைவு நிலை மோசமாக இருந்தது குறித்தும் அக்கூட்டத்தில் பேசப்படுகிறது.
சில சிக்கல்கள் இருப்பதை அனைவரும் அறிந்திருக்கக்கூடும். தற்போது அவற்றைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுப்பிரமணியம் கூறினார்.
டாங் ஜீ-ஈ வெய் முதன்முதலில் ஜூனியர்களாக இணைந்து, 2016 இல் ஸ்பெயினின் பில்பாவோவில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றனர். அவர்கள் 2022 நவம்பர் மாதம் மீண்டும் இணைந்து குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தனர். உலகத் தர வரிசையில் 4 ஆம் இடத்திற்கு உயர்ந்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.