சியோல், மார்ச்.24-
தென் கொரியாவில் கடந்த மூன்று தினங்களாக பேரளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. தீயில் இதுவரை நால்வர் பலியான வேளை, அறுவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஐவர் படுகாயமடைந்து உள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,500 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சியோலில் இருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான்சியோங் கவுண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீ பரவத் தொடங்கியதாகவும் பின்னர் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தற்போதைய பேரிடரைக் கட்டுப்படுத்த அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு தீயணைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரிய ஊடக அறிக்கைகளின்படி, இதுவரை சுமார் 3,286.11 ஹெக்டேர் நிலம் எரிந்துள்ளது. வடக்கு கியோங்சாங் மாவட்டத்திக் உய்சோங் மற்றும் சான்சியோனில் முறையே ஆயிரம் ஹெக்டேர் நிலம் அழிந்துள்ளது. நாட்டின் தென்கிழக்கில் நான்கு பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.