கோலாலம்பூர், மார்ச்.24-
சிறைச்சாலையில் நன்னடத்தையில் சிறந்து விளங்கும் 600 கைதிகள், அடுத்த வாரம் ஹரிராயா பெருநாளைத் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹரிராயா கொண்டாட்டம் முடிவடைந்ததும் அந்த 600 கைதிகளும் சிறைவாசத்தை அனுபவிப்பதற்கு மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும். சிறைக் கைதிகளுக்கான லைசென்ஸ், அடிப்படையில் 600 பேருக்கு இந்த விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும் விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ள கைதிகள் பட்டியலில் காஜாங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் விடுப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.
காரணம் 21 வயது முதல் 68 வயதுக்கு உட்பட்ட கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை இலாகா தெரிவித்துள்ளது. நஜீப்பிற்கு வயது 72 என்பதால் சிறைச்சாலை இலாகா வெளியிட்டுள்ள பட்டியலில் அவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது.