ஒரு நூற்றாண்டு காலக் கோவில், எவ்வாறு சட்டவிரோதக் கோவில் என்று வகைப்படுத்த முடியும்? – மஹிமா கேள்வி

கோலாலம்பூர், மார்ச்.24-

நாட்டின் தலைநகரில் 130 ஆண்டு கால பழமை வாய்ந்த தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை ஹாராம் என்று கூறி, எவ்வாறு சட்டவிரோதக் கோவிலாக வகைப்படுத்த முடியும் என்று மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள அந்த பழமை வாய்ந்த கோவிலின் அந்தஸ்து குறித்து இனம் மற்றும் சமய விவகாரத்தைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் அவரவர் மனம் போன போக்கில் வியாக்கியானம் செய்து வருவது தொடர்பில் டத்தோ சிவகுமார் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு சமயத் தளமாக ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலோக வேரூன்றி விட்ட ஒரு திருத்தலம் வீற்றிருக்கும் இடம் எவ்வாறு ஹாராம் என்று சொல்ல முடியும் என்று டத்தோ சிவகுமார் வினவினார்.

இந்தக் கோவில் உண்மையில் அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்றிருக்கவில்லை என்றால் தொடக்கத்திலிருந்தே கோவில் பதிவு மற்றும் அதற்கான அங்கீகாரத்தை வழங்க தவறியதற்காக அதிகாரிகளே தார்மீக பொறுப்பேற்க வேண்டுமே தவிர அது கோவில் நிர்வாகம் அல்லது பக்தர்களின் தவறு அல்ல என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தை அரசியலாக்கவோ அல்லது மலேசியர்களிடையே பிரிவினையை உருவாக்கவோ பயன்படுத்த வேண்டாம் என்றும் டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

எனினும் இந்த ஆலய விவகாரத்திற்கு ஒரு தீர்வு எட்டப்படும் வரை கோயிலை இடிக்கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோ மைமுனா முகமட் ஷாரிப் உறுதியளித்தார்.

மேலும், எடுக்கப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருப்பதைப் போல சமய சுதந்திரத்திற்கு இழுக்கு ஏற்படா வண்ணம் இருக்கும் என்று டத்தோ பண்டார் குறிப்பிட்டுள்ளார்.

மடானி அரசாங்க ஆட்சியில் எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் அரசாங்கம் இடிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் உறுதியளித்துள்ளார்.

எனவே தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மஹிமாவின் எதிர்பார்ப்பாகும் என்று டத்தோ சிவகுமார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS