பெட்டாலிங் ஜெயா, மார்ச்.24-
தேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸ், போயிங்கிடமிருந்து திடீரென்று 30 விமானங்களை வாங்குவதற்கு முன் வந்திருப்பது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகச் சந்தித்து பேசுவதற்காக ஏற்படுத்தப்படும் ஒரு சந்தர்ப்பமாக இருக்காது என்று கெராக்கான் நம்புவதாக அதன் தலைவர் டொமினிக் லாவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடமிருந்து திடீரென்று 30 விமானங்களை மலேசிய ஏர்லைன்ஸ வாங்குதாக அறிவித்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக டொமினிக் லாவ் குறிப்பிட்டார்.
ஏற்கனவே டொனால்டு டிரம்புடன் அன்வார் பேசுவதற்கான வாய்ப்பை, அமெரிக்காவிற்கான முன்னாள் மலேசியத் தூதர் முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் ஏற்படுத்தித் தரத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், அப்படியொரு சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே ஏற்படுத்துவதற்காகத்தான் விமானம் கொள்முதல் நடைபெறுவதைப் போல ஒரு சந்தேகம் வலுத்து வருவதாக டொமினிக் லாவ் குறிப்பிட்டார்.