கோலாலம்பூர், மார்ச்.24-
சமயத்தை இழிவுப்படுத்தும் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
சமயத்தை இழிவுப்படுத்தும் நபர்களுக்கு எதிராக மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியுடன் இணைந்து அரச மலேசிய போலீஸ் படை மேற்கொண்டு வரும் கடும் நடவடிக்கையே இதற்கான முக்கியக் காரணமாகும் என்று ஐஜிபி விளக்கினார்.
இவ்வாண்டில் முதல் மூன்று மாத காலத்தில் நாடு தழுவிய நிலையில் சமய அவமதிப்பு செயல்கள் தொடர்பில் 17 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 12 சம்பவங்கள் குறைவாகும் என்று டான்ஶ்ரீ ரஸாருடின் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களின் ஓன்லைன் உள்ளடக்கத்தைக் கண்காணிப்பது, நீக்குதல், அல்லது தடுப்பதற்கான உத்தரவுகளை வழங்குதல் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களைக் கையாளுவதும், உரிய நடவடிக்கை எடுப்பதும் எம்சிஎம்சியின் பொறுப்பாகும்.
அந்த ஆணையத்துடன் போலீஸ் துறை நெருக்கமான ஒத்துழைப்பு கொண்டதன் விளைவாக சமயத்தை இழிவுப்படுத்தும் சம்பவங்களின் எண்ணிக்கையைப் பெருவாரியாக குறைக்க முடிந்துள்ளது என்று ஐஜிபி குறிப்பிட்டார்.