கோலாலம்பூர், மார்ச்.24-
அண்மையில் நடைபெறற் ஜசெக. உயர் மட்டப் பதவிகளுக்கான மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் முடிவைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் நடைபெறலாம் என்று ஆருடங்கள் வலுத்து வருகின்றன.
அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஜசெக.வின் முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் தெங்கு ஸாப்ஃருல் அஸிஸின் செனட்டர் பதவிக் காலம் வரும் டிசம்பரில் முடிவு பெறும் பட்சத்தில் அமைச்சரவையில் மிகப் பெரிய சீரமைப்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஓங் கியான் மிங் குறிப்பிட்டுள்ளார்.
ஜசெக தேர்தல் முடிவு, தற்போது கட்சி சார்பில் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்து வருகின்றவர்களின் நிலையை பாதிக்காது என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் உறுதி அளித்துள்ளார்.
ஆனால், ஜசெக தேர்தலில் தோல்விக் கண்ட கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் மகளும் துணை நிதி அமைச்சருமான லிம் ஹுய் யிங் மற்றும் தேர்தலில் போட்டியிடாத சட்டத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் போன்றவர்கள் மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளனர் என்று ஒங் கியான் மிங் சுட்டிக் காட்டினார்.