கோலாலம்பூர், மார்ச்.25-
கடந்த மார்ச் 16 ஆம் தேதி நடைபெற்ற ஜசெக தேர்தல் முடிவைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடமும், ஜசெக பொதுச் செயலாளர் என்ற முறையில் அந்தோணி லோக்கிடமும் தாம் விட்டு விடுவதாக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
ஜசெக தேர்தல் முடிவு, பல மாற்றங்களை உள்ளடக்கியிருப்பதால், தேர்தலில் போட்டியிடாதவர்களும், தோல்விக் கண்டவர்களும் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்று இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஜசெக தேர்தல் முடிவு, அமைச்சரவையில் மாற்றம் செய்யும் அளவிற்கு எதிரொலிக்காது என்று அந்தோணி லோக் இதற்கு முன்பு திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக மனித வள அமைச்சருமான ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார்.
எனினும் இறுதி முடிவு எடுக்க வேண்டியது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் அந்தோணி லோக்கைப் பொறுத்தது என்று ஸ்டீவன் சிம் விளக்கினார்.