அவதூறுகள் பரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துங்கள் – பத்து எம்.பி. பிரபாகரன் கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச்.25-

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் கோவில் பிரச்னை தொடர்பாக அவதூறுகளையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், பரப்பி வரும் பொறுப்பற்ற தரப்பினர், தங்கள் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பத்து எம்.பி. P. பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆலய விவகாரத்தை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வதற்கு, கோயில் நிர்வாகத்துடனும், கட்டுமான நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கத்திற்கு சற்று கால அவகாசம் வழங்குமாறு பிரபாகரன் வலியுறுத்தினார்.

அதே வேளையில் இந்த ஆலய விவகாரம் தொடர்பாக சில உண்மைகளையும் பகிர்த்து கொள்ளத் தாம் விரும்புவதாக பிரபாகரன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், கூட்டரசு பிரதேசத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தப் பிரச்சினையில் நான் நேரடியாக ஈடுபட்டுள்ளேன்.

ஆலயத்தின் தற்போதைய நிலமான கோவில் நிலம் லாட் 328 -க்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் தரப்பினரால் மாற்றப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

2008 ஆம் ஆண்டு டிபிகேஎல் தரப்பினரால் திட்டமிடப்பட்ட ஒரு மேம்பாட்டுத் திட்டத்தின் காரணமாக, அப்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கோயில் இடமாற்றம் செய்யப்பட்டது.

ஊராட்சி மன்றத்தினால், குறிப்பாக டிபிகேஎலிலிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகு, கோயிலின் புதிய தளமான லாட் 328 , செக்‌ஷன் 40, ஜாலான் பூனுஸ் எனாம், ஒப் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தது.

கோவில் இடம் மாற்றப்பட்ட 328 ஆவது லாட் நிலத்தை அரசாங்கப் பதிவேட்டில் Gazzett- ( கேசட் ) செய்வதற்கு கோவில் நிர்வாகம் , கடந்த 2012 ஆம் ஆண்டில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் தோல்வியடைந்தன.

எனினும் கோவில் வீற்றிருக்கும் லாட் எண் 328 ஆவது நிலத்தை, 2014 ஆம் ஆண்டில் ஒரு மேம்பாட்டாளர் நிறுவனத்திற்கு டிபிகேஎல், விற்றுவிட்டது. இதுதான் நடந்த உண்மை.

எனவே கோவில் தொடர்பாக அவதூறுகளையும், தவறான தகவல்களையும் பரப்பி வரும் தரப்பினர், தங்கள் செயலை உடடினயாக நிறுத்திக் கொண்டு, இவ்விவகாரம் சுமூகமாக தீர்வு காண்பதற்கு வழிவிட வேண்டும் என்று பத்து எம்.பி. பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS