ஷா ஆலாம், மார்ச்.25-
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் கோவில் விவகாரத்தில் பள்ளிவாசலைக் கட்டும் அதே வேளையில் அந்த ஆலயத்தையும் அங்கேயே நிலை நிறுத்தங்கள் என்று சட்ட வல்லுநரும், பாசீர் கூடாங் பிகேஆர் எம்.பி.யுமான ஹாசான் அப்துல் காரிம் ஆலோசனைக் கூறினார்.
இரண்டு வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தில் நமது சமய நல்லிணக்கத்தின் அடையாளமாாக இதனை நாம் செய்தாக வேண்டும் என்று அந்த பிகேஆர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
தற்போது வீற்றிருக்கும் ஆலயம் இடிக்கப்படாமல் அங்கேயே நிலைநிறுத்தப்பட வேண்டும். அதே வேளையில் அருகில் உள்ள நிலத்தில் பள்ளிவாசலை நிர்மாணிக்கலாம் என்று அந்த மூத்த எம்.பி. பரிந்துரை செய்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி இஸ்லாம் அதிகாரத்துவ சமயமாக இருந்தாலும் இந்த நாட்டில் உள்ள மற்ற மதத்தினரும் தங்கள் சமயத்தைப் பின்பற்றுவதற்கு சுதந்திரம் அளித்துள்ளது.
மற்ற சமயங்களையும் குறிப்பாக இந்த நாட்டில் உள்ள இந்து சமயத்தினரையும் நாம் மதித்து போற்றும் வகையில் நமது சிறப்பை உணர்த்த வேண்டும். அந்த ஆலயத்தை உடைக்காமல் அங்கேயே நிலை நிறுத்தலாம். ஜாகேல் நிறுவனம் விரும்பியதைப் போலவே அங்கே பள்ளிவாசலைக் கட்டலாம் என்று ஹாசான் அப்துல் காரிம் குறிப்பிட்டுள்ளார்.