ஈப்போ, மார்ச்.25-
கேபள் திருடும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம், நேற்று மாலை 6 மணியளவில் ஈப்போ – லூமுட் நெடுங்சாலை அருகில் தாமான் சிலிபின் ரியா, தெனாகா நேஷனல் பெர்ஹாட்டுக்குச் சொந்தமான துணை மின்நிலையத்தில் நிகழ்ந்தது.
38 வயதுடைய அந்த ஆடவர், கேபள்களை வெட்டிக் கொண்டு இருந்த போது, அவரை மின்சாரம் தாக்கியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர், இதனை வீடியோ பதிவு செய்துள்ளார். கேபள்களை வெட்டிக் கொண்டு இருந்த இருவர் மின்சாரம் தாக்கி கீழே விழும் காட்சி அதில் பதிவாகியுள்ளது..
கீழே விழுந்த இருவரில் ஒருவன், மின்னல் வேகத்தில் எழுந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். மற்றொருவர் சம்பவ இடத்திலேயே சுருந்து விழுந்தார் என்று ஏசிபி. அபாங் ஸைனால் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தெனாகா நேஷனல் பெர்ஹாட் போலீசில் புகார் செய்து இருக்கிறது. உயிரிழந்த நபருக்கு 10 குற்றப்பதிவுகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது என்று அவர் மேலும் கூறினார்.