கோலாலம்பூர், மார்ச்.25-
எஸ்எம்ஈ வங்கிக் குழுமத்தின் 5 கோடி வெள்ளி வங்கி வணிகம் திட்டத்தைத் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
நாட்டில் உள்ள இந்திய வணிகர்களுக்கு உதவுவதற்காகவும், வணிகத் துறையில் இளைஞர்கள் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் எஸ்எம்ஈ வங்கி குழுமம் இந்த வணிகம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வணிகம் திட்ட அறிமுக விழா இன்று எஸ்எம்ஈ வங்கிக் குழுமத்தின் ஆடிட்டோரியம் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
எஸ்எம்ஈ வங்கியின் தலைவர் டத்தோ முஸ்லிம் ஹூசேன், தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கூட்டுறவுத் துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைரூல் டிஷாம்மி, எஸ்எம்ஈ வங்கியின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ டாக்டர் முகமட் ஹர்டி இப்ராஹிம் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.
தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்திற்குத் தேவையான இயந்திரங்கள், வர்த்தக உபகரணங்கள் வாங்க இந்த நிதி பெரிதும் துணைபுரியும் என்று டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
சிறு தொழில்முனைவோரை முக்கியப் பங்களிப்பாளர்களாக அங்கீகரிக்கும், அதே நேரத்தில் மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கியமான ஒன்றாக இத்திட்டம் செயல்படும் என்று டத்தோஸ்ரீ இரமணன் குறிப்பிட்டார்.
VFS-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், மலேசியா முழுவதும் மேலும் புதுமையான வணிகங்களை ஊக்குவிக்கவும், இந்திய தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் இத்திட்டம் கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஒரு தொழில் முனைவோர் 1 லட்சம் வெள்ளி முதல் 3 லட்சம் வெள்ளியை 6 விழுக்காடு வட்டியில் கடனுதவியாகப் பெறலாம்.
இந்த எஸ்எம்ஈ வங்கி குழுமத்தின் 5 கோடி வெள்ளி வங்கி வணிகம் நிதிக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று டத்தோஸ்ரீ இரமணன் கேட்டுக் கொண்டார்.
சிறு தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் வணிகம் நிதி மூலம் பெரும் நன்மை அடையலாம் என்றார் அவர்.