மலாக்கா, மார்ச்.25-
மலாக்கா மாநிலத்தில் தனிநபராக வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்த 4 கொள்ளையர்களை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்துள்ளார்.
சாலே, நாதன், ஜோசப் மற்றும் ஜெபோட் என்ற அந்த 4 கொள்ளையர்கள் பிடிபட்டது மூலம் மொத்தம் 76 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்களைக் கொள்ளையடித்த சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.
31 க்கும் 58 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்ரும் வீடு புகுந்து திருடுதல், வழிப்பறி கொள்ளை முதலிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கிரிஸ்டப்பர் பாதிட் இதனைத் தெரிவித்தார்.
இதில் சாலே என்ற 48 வயதுடைய நபர், கோலாலம்பூரில் பாதுகாவலர் வேலை செய்து கொண்டு, மலாக்காவில் கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். ஆள் இல்லாத வீட்டில் நுழைந்து சுமார் 45 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அந்த வீட்டில் பதிவு செய்யப்பட்ட கைரேகையை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட பாதுகாவலரைத் தாங்கள் கைது செய்ததாக கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.