ஷா ஆலாம், மார்ச்.25-
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை இடம் மாற்றுவதற்கும், மடானி பள்ளி வாசலை நிறுவுவதற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துள்ள நடவடிக்கை மிகச் சரியானதாகும் என்று பாஸ் கட்சி இன்று வர்ணித்துள்ளது.
பிரதமர் அன்வாரின் இந்த நடவடிக்கையை பாஸ் கட்சி முழுமையாக வரவேற்பதாக பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மாட் பாஃட்லி ஷாரி இன்று பிற்பகலில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தில் எந்தவொரு கட்டடமும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு இருக்குமானால் அதனை அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.
இது சமயம் சம்பந்தப்பட்ட விவகாரமாகக் கருதக்கூடாது. மாறாக, சட்ட அம்சங்களுக்கு உட்பட்டதாகும் என்று பாசீர் மாஸ் எம்.பி.யான அஹ்மாட் பாஃட்லி குறிப்பிட்டார்.
கோவில் நில விவகாரத்தில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார் எடுத்துள்ள உறுதியான மற்றும் திடமான முடிவை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்று அஹ்மாட் பாஃட்லி கேட்டுக் கொண்டார்.
இது போன்ற பிரச்னை எதிர்காலத்தில் நிகழக்கூடாது என்று தாங்கள் நம்புவதாக அஹ்மாட் பாஃட்லி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.