தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடம் மாற்றம் விவகாரம், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் கிட்டிய வெற்றி – அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

கோலாலம்பூர், மார்ச்.25-

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் விவகாரத்திற்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டதற்கு, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் கிட்டிய வெற்றியாகும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

கோயிலின் நிலை குறித்து தங்கள் அச்சத்தையும், கவலையையும் தெரிவிக்க கோவில் நிர்வாகக் குழுவினர், சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தம்மை தொடர்பு கொண்டு உதவிக் கோரியதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

இக்கோவிலை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தங்கள் தரப்பினர் அதற்கான ஆயத்த வேலைகளை முன்னெடுத்ததாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட அதே வேளையில் தாமே நேரடியாக தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து நிலவரத்தைக் கேட்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் P. பிரபாகரன் கோயில் நிர்வாகத்திற்கு பக்கபலமாக இருந்து உதவியுள்ளார். கோவில் விவகாரம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் கோவிலுக்குச் சிறந்த தீர்வை ஆராய்வதாக இருந்தது.

இதன் காரணமாக கோவில் நிர்வாகத்தினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு வழிவகுத்தது. அது தொடர்பான கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதன் பலனாக ஆலய இட மாற்றத்திற்கு புதிய இடத்திற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. புதிய இடம் 4,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் கோயில் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.

இனி சட்டப்படி அந்த நிலம் கோவிலின் பெயரில் அரசிதழில் பதிவு செய்யப்படும் என்று கோபிந்த் சிங் உறுதி தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண உதவிய கூட்டரசு பிரதேசத்திற்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தபா, பத்து எம்.பி. பிரபாகரன், கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ மைமுனா முகமட் ஷாரிப் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல், அதன் அதிகாரிகள் ஆகியோருக்கு தமது நன்றியை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் கோபிந்த் சிங் இன்றிரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS