பெட்டாலிங் ஜெயா, மார்ச்.26-
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமான்சாராவில் உள்ள ஒரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 20 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை சாட்சிகள் உட்பட 12 தனி நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த அன்று மாலை 4.56 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட கொள்ளையன் கண்ணாடி பேழைகளில் வைக்கப்பட்டு இருந்த 20 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 6 அடுக்கு நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளான் என்பது புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டான். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.
துப்பாக்கி முனையில் இந்த துணிகரக் கொள்ளையை நடத்தியவன் ஓர் உதவிப் போலீஸ்காரர் என்பது தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.