சைபர் தாக்குதலினால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் செயலாக்கத்தில் பாதிப்பா?

கோலாலம்பூர், மார்ச்.26-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏவில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலினால் விமான நிலையத்தின் செயலாக்கங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவதை அந்த பிரதான விமான நிலையத்தை வழிநடத்தி வரும் MAHB எனப்படும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் இன்று மறுத்துள்ளது.

கேஎல்ஐஏவில் விமானச் சேவைகளில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. விமானம் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பயணிகள் அவதிக்குக்குள்ளானதாக எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோட்லிங்ஸ் பெர்ஹாட்டின் தொடர்புத்துறைத் தலைமை நிர்வாகி ஷுக்ரீன் மா தெரிவித்தார்.

விமானப் புறப்பாடு மற்றும் விமானம் தரையிறங்குதல் உட்பட விமான நிலையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சுமூகமாக நடைபெற்று வருவது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக ஷுக்ரீன் மா குறிப்பிட்டார்.

கேஎல்ஐஏ விமான நிலையத்தின் கணினி வலையமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றின் கணினிச் சாதனங்களை இலக்காக கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையத் தாக்குதல் எனப்படும் சைபர் தாக்குதல் நடந்து இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் ஷுக்ரீன் மா பதில் அளித்தார்.

இந்த சைபர் தாக்குதலினால் விமானச் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அவர் வன்மையாக மறுத்தார்.

WATCH OUR LATEST NEWS