நீலாய், மார்ச்.26-
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவிலுள்ள தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் விவகாரத்தில் கிடைத்த சுமூகமான தீர்வை வரவேற்போம் என்று நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜ. அருண்குமார் தெரிவித்துள்ளார்.
ஆலய நிலம் தொடர்பான பிரச்சனை எழுந்ததிலிருந்து, பிரதமர் அன்வார் இப்ராஹிம், மத்திய அரசு மற்றும் டிபிகேஎல் ஆகியோர், இந்த கோயிலை இடமாற்றம் செய்வதில் அனைத்து தரப்பினர்களுடனும் ஒருமித்த தீர்வு எட்டப்படும் வரை, கோயில் இடிக்கப்படாது அல்லது வெளியேற்றப்படாது என்று உறுதியளித்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.
கோவிலின் பெயரிலே புதிய இடத்திற்கான நிலப்பட்டா பதிவு செய்வது இப்பிரச்சினைக்குச் சுமூகமான ஒரு தீர்வை வழங்கியுள்ளது. மேலும், இதன் தொடர்பில் கோவிலின் நிலை குறித்து இனி யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
இதற்கு முன் இந்த ஆலய நிலத்தில் ஏற்பட்ட தவறுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்ய, இந்நிலத்திற்கு ஆலயப் பெயரில் உடனடியாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீலாய் சட்டமன்ற உறுப்பினரான அருண்குமார் வலியுறுத்தினார்.
இது போன்ற ஒவ்வொரு முக்கியமான பிரச்சனையும், மலேசிய சமூகத்தின் ஒற்றுமையைப் பிளவுப்படுத்தாத வகையில் கவனமாகக் கையாளப்பட வேண்டும்.
இனிமேல் இந்தக் கோயிலுக்கான புதிய இடத்தையொட்டி யாரும் விமர்சிக்கவோ தேவையில்லாத வில்லங்கத்தை ஏற்படுத்தவோ மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இந்த கோவில் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் கேள்விக் கணைகள் தொடுக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஒன்றுபட்ட மலேசிய சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதோடு நாம் முன்னேறுவதற்கான செயல் திட்டங்களில் ஈடுபடுவோம் என்று அருண் குமார் குறிப்பிட்டார்.
கோயில் செயற்குழுவுடன் இந்த இடமாற்றம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு முன்முயற்சிகளை முன்னெடுத்த இலக்கவியல் அமைச்சர், கோபிந்த் சிங் டியோ, கூட்டரசுப் பிரதேச அமைச்சர், துணை அமைச்சர்கள், டிபிகேஎல் மேயர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்வதாக அருண்குமார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.