கோலாலம்பூர், மார்ச்.26-
உலகில் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், மீண்டும் கோலாலம்பூருக்கான தனது விமானச் சேவையை தொடங்கவிருக்கிறது.
லண்டன் ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையத்திற்கும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையிலான பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானச் சேவை வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
நெடுந்தூர பயணத்திற்கான Boeing 787-9 ரக விமானங்களை பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பயன்படுத்தவிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோலாலம்பூருக்கான தனது விமானச் சேவையை தொடங்கவிருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் வருகை, ஒரு நல்வரவாகும் என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் வியூகப்பிரிவு தலைமை நிர்வாகி மெகாட் ஆர்டியான் வீரா முகமட் அமினுடின் தெரிவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு உலக முழுவதும் கோவிட் 19 – தாக்குதலினால் லண்டனுக்கும், கோலாலம்பூருக்கும் இடையிலான தனது விமானச் சேவையை பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுத்தியது.
கோலாலம்பூருக்கும், லண்டனுக்கும் இடையிலான வழித்தடம் வியூகம் நிறைந்தது என்பதால் அந்த வழித்தடத்தை தொடர்வதற்கு பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மீண்டும் முற்பட்டுள்ளதாக மெகாட் ஆர்டியான் தெரிவித்தார்.