நோன்புப் பெருநாளை முன்னிட்டு டத்தோஸ்ரீ சுந்தராஜு அன்பளிப்புகளை வழங்கினார்

பிறை, மார்ச்.26-

நோன்புப் பெருநாளை முன்னிட்டு, பிறை சட்டமன்ற உறுப்பினரும், பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, தமது பிறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முஸ்லிம் பெருமக்களுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கி சிறப்பு செய்தார்.

பிறை, மஸ்ஜிட் ஜாமேக் பிறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரமலான் மாதத்தையொட்டி நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு டத்தோஸ்ரீ சுந்தராஜு அன்பளிப்புகளை வழங்கி, அவர்களை பெருநாள் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிகழ்வில் செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் பொன்னுதுரை விக்டர் கலந்து கொண்டார்.

தமது பிறை சேவை மையத்தில் பதிவு செய்து கொண்டுள்ள தகுதிவாய்ந்த பெறுநர்களுக்கு தலா 120 ரிங்கிட் மதிப்புள்ள 120 உணவுப் பொட்டலங்களை டத்தோஸ்ரீ சுந்தராஜு வழங்கினார்.

அடுத்த வாரத்தில் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயா பெருநாளுக்குத் தயாராகும் மக்களுக்கு உதவும் முயற்சியில் ஒரு பகுதியாக தனிப்பட்ட முறையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு இந்த உதவிகளை வழங்கினார்.

தமது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தமது வாக்காளர் பெரும் மக்களுக்கு உதவுவதில் தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

இந்த உதவிகள், பெருநாளையொட்டி அவர்களின் சிரமங்களைக் குறைக்கும் என்று தாம் பெரிதும் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியா இன மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட ஒரு தனித்துவமான நாடாகும். இதுவே நமது முக்கிய பலமாகும். எனவே, நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும். தொடர்ந்து ஒன்றுபடுவோம், ஒருவரையொருவர் மதித்து, இந்த பண்டிகைக் காலத்தை ஒரு பெரிய குடும்பமாகக் கொண்டாடுவோம் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு தமது உரையில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS