மின்சாரப் பொறியியலாளருக்கு 7 நாள் சிறை

ஷா ஆலாம், மார்ச்.26-

வர்த்தகத் தளம் ஒன்றில், தெனாகா நேஷனலுக்குச் சொந்தமான மின்சார மீட்டரை மாற்றியமைத்த விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருக்க அந்த கடையின் உரிமையாளரிடம் 780 லஞ்சமாக பெற்றக் குற்றத்திற்காக மின்சாரப் பொறியியலாளர் ஒருவருக்கு ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 7 நாள் சிறை மற்றும் 3,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.

40 வயது எஸ். தியாகராஜன் என்ற அந்த மின்சாரப் பொறியியலாளர், நீதிபதி டத்தோ முகமட் நாசீர் நோர்டின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தமிழ்மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இது போன்ற குற்றத்தை மீண்டும் செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான தியாகராஜனை நீதிபதி எச்சரித்தார்.

கடந்த மார்ச் 20 ஆம் தேதி பூச்சோங், பூசாட் பண்டார் பூச்சோங்கில் ஒரு கோப்பிதியாம் கடையில் அதன் உரிமையாளரான 29 வயதுடைய பெண்மணியை நம்பவைத்து லஞ்சப் பணத்தைப் பெற்றுச் சென்றதாக தியாகராஜன் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

தனது நண்பருடன் அந்த கோப்பிதியாம் கடையில் மின்சார மீட்டரைச் சோதனையிட்ட தியாகராஜன், மின்சாரம் களவாடப்பட்டு இருப்பதாகக் கூறி, தன் கைவரிசையைக் காட்டியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தியாகராஜனிடம் பணம் கொடுத்த மறுநாளே கடை உரிமையாளரான அந்தப் பெண்மணி இது குறித்து எஸ்பிஆர்எம்மில் புகார் செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS