கோலாலம்பூர், மார்ச்.26-
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் இட மாற்றத்திற்கு கோவில் நிர்வாகத்திற்கு அரசாங்கம் 20 லட்சம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கியுள்ளதாக சர்சைக்குரிய சமயப் போதகர் பிஃர்டாவுஸ் வோங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் பிஃர்டாவுஸ் வோங் தனது முகநூலில் முன்வைத்துள்ள குற்றஞ்சாட்டை, கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தாபா வன்மையாக மறுத்துள்ளார்.
பிஃர்டாவுஸ் வோங்கின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதுடன் அடிப்படையற்றது என்று அமைச்சர் டாக்டர் ஸாலேஹா குறிப்பிட்டுள்ளார்.
பிஃர்டாவுஸ் வோங் கூறுவதைப் போல கோவில் நிர்வாகத்திற்கு இழப்பீட்டு வடிவில் எந்தவொரு பணத் தொகையையும் கொடுப்பதற்கோ அல்லது அங்கீகரிப்பதற்கோ எந்த வாக்குறுதியையும் அரசாங்கம் வழங்கவில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் இட மாற்ற விவகாரம், சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்டதாக நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், இழப்பீடு தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் கோவில் நிர்வாகத்துடன் செய்து கொள்ளப்படவில்லை என்பதையும் அமைச்சர் டாக்டர் ஸாலேஹா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விளக்கினார்.
தங்களைப் பொறுத்தவரையில் இவ்விவகாரத்தில் இரு தரப்பினருமே சரிநிகரான வெற்றி வாய்ப்பு உறுதிச் செய்யப்பட்டதே தவிர இழப்பீடு தொடர்பில் எந்த விவகாரமும் பேசப்படவில்லை என்று டாக்டர் ஸாலேஹா குறிப்பிட்டார்.