ஜார்ஜ்டவுன், மார்ச்.27-
மதுபோதையில் காரைச் செலுத்தி, எஸ்பிஎம் தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த 18 வயது மாணவனை மோதித் தள்ளி, மரணம் விளைவித்ததாக வியட்நாம் பிரஜையான மாது ஒருவர், ஜார்ஜ்டவுன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
உள்ளூர் நபரைத் திருமணம் செய்து கொண்டவரான 40 வயது Nguyen Thi Kim Oanh என்ற அந்த மாது, கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு 9.48 மணியளவில் பினாங்கு, ஜாலான் ஜெலுத்தோங்கில் ஊய் கி ஹெங் என்ற மாணவனுக்கு மரணம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் நாட்ராது நாய்ன் முகமட் சைடி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மாது, தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரியுள்ளார்.
தனது நண்பர்களுடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவனை மோதித் தள்ளிய அந்த வியட்நாம் பெண், விசாரணை கோரியிருப்பதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.