இயந்திரத்தில் தீப்பற்றியது – 171 பயணிகளுடன் ஏர் ஆசியா விமானம் அவசரத் தரையிறக்கம்

கோலாலம்பூர், மார்ச்.27-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கேஎல்ஐஏ 2-லிருந்து 171 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் சீனா, Shenzhen- க்கு புறப்பட்ட ஏர் ஆசியா விமானம், நடுவானில் இயந்திரத்தில் தீப்பற்றிக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து ஏர் ஆசியாவின் Airbus A320 ரக விமானம், மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்பி, அவசரமாகக் தரையிறங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 10.37 மணியளவில் நிகழ்ந்தது. விமான நிலையத்திலிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து ஓர் அதிகாரி உட்பட 9 வீரர்கள், ஓடு பாதை அருகில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்டையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.

விமானம் தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டதுடன், விமானத்தின் வலப்புற இயந்திரத்தில் ஏற்பட்ட தீ முழு வீச்சில் அ ணைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த ஏர்பஸ் விமானம் கோலாலம்பூரிலிருந்து சீனாவை நோக்கி இரவு 9.59 மணிக்கு புறப்பட்ட அடுத்த 36 ஆவது நிமிடத்தில் வலப்புற இயந்திரத்தில் தீப்பொறிகள் கிளம்பியதாகக் கூறப்படுகிறது. விமானத்தை மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்ப முடிவு செய்த விமானி, எரிபொருளைக் கொட்டுவதற்கும், ஓடுபாதை திறக்கப்படுவதற்கான உத்தரவை விமான கட்டுப்பாட்டுக் கோபுரத்திலிருந்து பெறுவதற்கும் ஏதுவாக வானில் சிறிது நேரம் வட்டமிட்டப் பின்னர் நள்ளிரவு 12.08 மணிக்கு கேஎல்ஐஏ 2 இல் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

விமான இயந்திரத்தின் Pneumatic Cutting Burst பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்துக் கொண்டதாக நம்பப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS