ஜோகூர் பாரு, மார்ச்.27-
கடந்த ஜனவரி மாதம் ஜோகூர் பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உள்ள ஓர் உணவகத்தில் மிக நெருக்கமான இடைவெளியில் ஆடவர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டச் சம்பவம் தொடர்பில் குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒன்பது சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி, 17 ஆம் தேதி வரை ஜோகூர் பாருவில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில், 36 க்கும் 66 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
இந்த ஒன்பது பேரையும் பிடிப்பதற்கு முன்னதாக, இந்த கொலை தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 64 வயது நபரை, போலீசார் மேற்கொண்ட முதலாவது சோதனை நடவடிக்கையின் போது சுட்டுக் கொன்றதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில் ஜோகூர் பாரு, தாமான் மோலேக்கில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64 வயது நபரை, போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். எனினும் அந்த நபர், போலீசாரை நோக்கி துப்பாக்கியினால் சுடத் தொடங்கியதைத் தொடர்ந்து அந்த நபரை சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டுக் கொன்றதாக கமிஷனர் டத்தோ குமார் விளக்கினார்.