சிப்பாங், மார்ச்.27-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சீனா, Shenzhen- க்கு புறப்பட்ட தனது விமானத்தின் இயந்திரத்தில் தீப் பிடித்துக் கொண்டதன் காரணமாக விமானம் அவசரமாக தரையிறங்கியதாகக் கூறப்படுவதை ஏர் ஆசியா விமான நிறுவனம் இன்று மறுத்துள்ளது.
விமானம், நேற்றிரவு 171 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் மீண்டும் கேஎல்ஐஏ-2 க்கு திரும்பியதற்கு முக்கியக் காரணம், விமான இயந்திரத்தில் தீப் பிடிக்கவில்லை. மாறாக, விமான இயந்திரத்திற்கும், கேபினுக்கும் இடையில் பொருத்தப்பட்டுள்ள காற்றை உள்வாங்கிக் கொடுக்கும் குழாயில் வெப்ப காற்று வெளியேறத் தொடங்கியது.
இதனால், சீனாவிற்கான தனது பயணத்தைத் தொடர முடியாமல் விமானத்தை கேஎல்ஐஏவிற்கே திருப்புவதென விமானி எடுத்த எடுத்தார். இதன் காரணமாகவே விமானம் கோலாலம்பூருக்கே திரும்பி அவசரமாகத் தரையிறங்கியதாக ஏர் ஆசியா விமான நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்தின் இயந்திரத்தில் தீப் பிடிக்கவில்லை என்று உறுதிப்படுத்திய ஏர் ஆசியா, அந்த ஏர்பஸ் A320 ரக விமானம் மீண்டும் வரும் திங்கட்கிழமை செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.