ஷா ஆலாம், மார்ச்.27-
மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா நிதி முறைகேடு தொடர்பான ஒரு வழக்கில் முரண்பாடான சாட்சியங்களை வழங்கியதாக இந்தியப் பெண்மணி ஒருவர், இன்று ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
35 வயது மீனாலோஷினி என்ற அந்தப் பெண் நீதிபதி நசீர் நோர்டின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
எஸ்பிஆர்எம்மின் முக்கிய சாட்சியாக வகைப்படுத்தப்பட்ட மீனாலோஷினி, முரண்பாடான சாட்சியங்கள் வழங்கியதாக மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி சிலாங்கூர், கோம்பாக்கில் சத்தியப் பிரமாண அதிகாரி அமீர் ஹம்ஸா அலி முன்னிலையில் மீனாலோஷினி வழங்கிய சத்தியப் பிரமாண வாக்குமூலத்திற்கும், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் வழங்கிய சாட்சியத்திற்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக அந்த இந்தியப் பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அரசு தரப்பு வழக்கறிஞர்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் மீனாலோஷினின் சாட்சியங்கள் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டு சிறை அல்லது ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு SPRM சட்டத்தின் கீழ் மீனாலோஷினி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து மீனாலோஷினி விசாரணை கோரியிருப்பதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதே வேளையில் அவரின் அனைத்துலக கடப்பிதழைப் பிடித்தம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.