கோலாலம்பூர், மார்ச்.27-
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய வளாகத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்த கோவிலின் பொறுப்பாளர்களை நேரடியாக சந்தித்து கைக்குலுக்கினார்.
தாம் ஏற்கனவே உறுதி அளித்திருந்ததைத் போல மடானி பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை இன்று மதியம், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய வளாகம் வீற்றிருக்கும் பகுதியில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வெற்றிகரமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.
பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டு விழா எந்தவொரு பிரச்னையுமின்றி சமூகமாக நிறைவு பெற்றவுடன் அருகிலுள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் வீற்றிருக்கும் பகுதிக்கு தனது மெய்க்காவலர்கள் புடைசூழ டத்தோஸ்ரீ அன்வார் நடந்து வந்தார்.
ஆலய வளாகம் முன் காத்திருந்த ஆலயத்தின் பொறுப்பாளர்களை நேரடியாகச் சந்தித்து டத்தோஸ்ரீ அன்வார் அவர்களுடன் கைக்குலுக்கினார். ஆலயப் பொறுப்பாளர்களும் பிரதமரை எதிர்கொண்டு வரவேற்றுக் கைக்குலுக்கினர்.
தவிர ஆலய வளாகத்தில் குவிந்திருந்த பொதுமக்களும் பிரதமருடன் கைக்குலுக்கி, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக, மடானி பள்ளிவாசல் திறப்பு விழாவில் உரைநிகழ்த்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், மடானி பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில், இவ்விடத்தில் வீற்றிருக்கும் ஓர் இந்து ஆலயத்தை இட மாற்றம் செய்யப்படும் விவகாரம் முறையாகக் கையாளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட தரப்பினரால் சமரசங்கள் செய்யப்பட்ட நிலையில் இதற்கான தீர்வு காணப்பட்டதாக டத்தோஸ்ரீ தெரிவித்தார்.