கோலாலம்பூர், மார்ச்.27-
அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் உட்பட அரசாங்க நிர்வாக உறுப்பினர்கள் விளையாட்டு சங்கங்களில் பதவிகளை வகிக்க விதிக்கப்பட்டுள்ள நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ அவ்வாறு கூறியுள்ளார்.
இருப்பினும், மலேசிய பூப்பந்து சங்கத்தின் (பிஏஎம்) தலைவராக பரிந்துரைக்கப்பட்ட முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு விலக்கு அளித்துள்ளார். ஏனெனில் அவரது அமைச்சர் பதவி இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது என்பதே அதற்குக் காரணம் என ஹான்னா விளக்கினார்.
விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகத்தில் அமைச்சர்கள் ஈடுபடுவதற்கு இதற்கு முன் அமைச்சரவை தடை விதித்தது. அதில் அவர்களின் பங்களிப்பும் நேரமும் அதிகம் தேவை என்பதால் அம்முடிவு எடுக்கப்பட்டதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
விளையாட்டுச் சங்கங்களில் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவி வகிக்க முடியாது என்பது அரசாங்கத்தின் கொள்கையாகவே உள்ளது.
அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் உட்பட அரசாங்க நிர்வாக உறுப்பினர்கள் எந்தவொரு விளையாட்டு சங்கத்திலும் பதவிகளுக்கு போட்டியிட முடியாது என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை தீர்மானித்தது.