புத்ராஜெயா, மார்ச்.27-
40 க்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள் காணாமல் போனது தொடர்பில் லெபானானைத் தளமாக கொண்ட குளோபல் ராயல்டி டிரேடிங் தங்க ஆபரண நிறுவனம் தனக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் அரசாங்கத்தையும், போலீசாரையும் மூன்றாம் தரப்பினராகக் கொண்டு வருவதில் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இன்று வெற்றி பெற்றுள்ளார்.
சம்பந்தப்பட்ட தங்க ஆபரண நிறுவனத்திற்கும், தமக்கும் இடையிலான வழக்காக இது இருந்தாலும் இதில் மூன்றாவது தப்பினராக மலேசிய அரசாங்கத்தையும், போலீசாரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரோஸ்மாவின் விண்ணப்பத்திற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தங்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்த நகைகள், காணாமல் போனதற்கு தாம் ஒருவர் மட்டுமே பொறுப்பேற்க இயலாது என்றும் இதில் போலீசாருக்கும், அரசாங்கத்திற்கும் கூட்டுக் கடப்பாடு உண்டு என்றும் ரோஸ்மா மன்சோர் செய்து கொண்ட மேல்முறையீட்டை அப்பீல் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அதே வேளையில் ரோஸ்மாவின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ரத்து செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிபதி டத்தோ P. ரவீந்திரன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.