கோலாலம்பூர், மார்ச்.27-
கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நில சர்ச்சையைத் தீர்ப்பதற்கு ஜாகேல் டிரேடிங் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம், இவ்விவகாரத்தைத் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லாதது ஏன் என்பதற்கு கூட்டரசு பிரதேசத்திற்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸாலேஹா முஸ்தபா இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நில சர்ச்சையைத் தீர்ப்பதற்கு இவ்விவகாரம், நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு இருக்குமானால், அதற்கு தீர்வு காண்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
இந்நிலையில் கோவில் வீற்றிருக்கும் ஜாகேல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில் மடானி பள்ளிவாசலை வெகு சீக்கிரமாக கட்டும் முயற்சியில் சுணக்கம் ஏற்படும் என்பதால் இவ்விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்படவில்லை என்று அமைச்சர் டாக்டர் ஸாலேஹா தெளிவுபடுத்தினார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு இருக்குமானால் நிச்சயம், மடானி பள்ளிவாசலை இப்போதைக்குக் கட்ட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் டாக்டர் ஸாலேஹாவின் ஆலோசனையின் பேரிலேயே இந்த விவகாரத்தைத் தாங்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லவில்லை என்று ஆலய நிலத்தை விலைக்கு வாங்கிய ஜாகேல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஶ்ரீ முகமட் பாஃரோஸ் முகமட் ஜாகேல் கூறியிருப்பது தொடர்பில் விளக்கம் அளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அதே வேளையில், இந்த விவகாரத்தை நல்லிணக்க முறையில் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தாங்கள் கொண்டிருந்த அணுகுமுறையும், நீதிமன்றத்திற்குச் செல்ல வழிவிடவில்லை என்று பாஃரோஸ் முகமட் விளக்கம் அளித்து இருந்தார்.