சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்து கைது

கோலாலம்பூர், மார்ச்.27-

சர்சைக்குரிய சமயப் போதகரும், இந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் நபருமான ஜம்ரி வினோத் காளிமுத்து இன்று மாலையில் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் நில விவகாரம் சர்ச்சை தொடர்பில் தனது முகநூலில் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக ஜம்ரி வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்ரி வினோத் கைது செய்யப்பட்டதை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் உறுதிப்படுத்தியுள்ளார்.

பெர்லிஸில் கைது செய்யப்பட்டுள்ள ஜம்ரி வினோத், பாடாங் பெசார் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு ஏதுவாக அவர் நாளை பெர்லிஸ், கங்கார் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவல் அனுமதி பெறப்படும் என்று ஐஜிபி தெரிவித்தார்.

நில சர்ச்சை தொடர்பில் மடானி பள்ளி வாசல் நிர்மாணிப்பதற்குக் கோவில் நிலத்தை வழிவிடும் வகையில் இட மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் சுமூகமாக தீர்வு கண்டுள்ள வேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதைப் போல் சர்ச்சைக்குரிய கருத்துகளை அந்த சமயப் போதகர் தனது முகநூலில் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS