புத்ராஜெயா, மார்ச்.28-
வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு ஹரிராயாவையொட்டி ரமலான் மாதத்தில் தீயணைப்பு வீரர்களுடனான விடியற்காலை உணவு, பேரீச்சம்பழங்களை விநியோகிப்பது, இஹ்யா நிகழ்வு என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அதன் ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டாடி வருகிறது.

KPKT இன் “பன்முகத்தன்மையில் ஒற்றுமை” என்ற வாசகத்திற்கு ஏற்ப, மலேசியாவின் கலாச்சார பன்முகத்தன்மை நாட்டின் மிகப் பெரிய பலங்களில் ஒன்றாகும் என்று அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
பண்டிகைச் சூழலை ஏற்படுத்தவும் அமைச்சுப் பணியாளர்களிடையே நட்புறவை வலுப்படுத்தவும் முந்தைய ஆண்டுகளைப் போலவே, அமைச்சின் வளாகத்தில் அழகான மற்றும் கண்களுக்கினிய ஈத் முபாரக் கருப்பொருளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

பல்வேறு இனம், சமூகம் மற்றும் மதங்களைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் சேர்ந்து, ஹரிராயா, தீபாவளி மற்றும் சீனப் புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளை அமைச்சில் கொண்டாடுவதில் பெருமைப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
மேலும், ஒவ்வொரு மலேசியருக்கும், இந்த முக்கியமான பண்டிகைகளை அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் கொண்டாடும் வாய்ப்பு ஒரு மிகப் பெரிய ஆசீர்வாதம் என்றாரவர்.
நாட்டின் நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையே அடித்தளமாக இருப்பதால், மக்களைப் பிரிக்க முயலும் எந்தவொரு குரல்களையும் நாம் நிராகரிக்க வேண்டும் என்று ஙா கோர் மிங் தெரிவித்தார்.

முன்னதாக, அவர் அமைச்சின் ஊழியர்களுக்கு பேரீச்சம்பழங்களை விநியோகிக்க திடீர் வருகை மேற்கொண்டார். அவர்களின் நலன் விசாரித்து, அளவளாவி மகிழ்ந்தார்.
பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்களின் அர்ப்பணிப்புள்ள சேவையைப் பாராட்டும் விதமாக, கோலாலம்பூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுடன் ரமலான் மாதத் தொடக்கத்தில் விடியற்காலை உணவு நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஓப்ஸ் சியாகா ராயா வாயிலாக பொதுப் பாதுகாப்பை உறுதிச் செய்ய ஹரிராயா பண்டிகைக் காலத்தில், 70 விழுக்காட்டுப் பணியாளர்களின் விடுமுறை முடக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், R&R ஓய்வெடுக்கும் பகுதிகளில் பொது கழிப்பறைத் தூய்மையை மேம்படுத்த தனியார் துறையுடன் ஒத்துழைப்பது போன்ற முயற்சிகளை அமைச்சு முடுக்கிவிட்டுள்ளது. இந்த முயற்சியானது, பண்டிகைக் கொண்டாடுவதற்காகத் தத்தம் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு முறையான வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.