குளுவாங், மார்ச்.28-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 58.1 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், குளுவாங்கிற்கு அருகில் நிகழ்ந்த நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஐவர் உயிரிழந்தனர்.
நேற்று பின்னிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஒரு MPV வாகனம், ஒரு டிரெய்லர் லோரி ஆகியவை தீப்பிடித்துக் கொண்டன. இதில் ஐவர் உயிரிழந்த வேளையில் மேலும் நால்வர் கடும் காயங்களுக்கும், இதர நால்வர் சொற்பக் காயங்களுக்கும் ஆளாகியுள்ளதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.
ஒரு எம்பிவி வாகனம், ஹீனோ ரக டிரெய்லர் லோரி ஆகியவற்றுடன் டொயோட்டா கேம்ரி மற்றும் புரோட்டோன் X50 ரக வாகனங்களும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த டிரெய்லர் லோரியின் முன் டயர் திடீரென்று வெடித்ததன் காரணமாக லோரி, சாலையில் அலைக்கழித்த நிலையில், எதிரே சென்ற டொயோட்டா கேம்ரி காருடன் மோதியது.
பின்னர் சாலைத் தடுப்பைக் கடந்து எதிர்த்திசை வழித்தடத்தில் நுழைந்ததில் எதிரே வந்த இதர வாகனங்களை மோதித் தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் எம்பிவி வாகனம் தீப்பற்றிக் கொண்டது. எனினும் அந்த வாகனத்திலிருந்த அனைவரும் அவசர, அவசரமாக வெளியேறி உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். புரோட்டோன் X50 ரக வாகனத்தில் இருந்த ஒரு தம்பதியர், அவர்களின் 2 வயது மகள் மற்றும் இதர இருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஏசிபி பாஹ்ரேன் விளக்கினார்.