சீருடையில் ஜாலுர் கெமிலாங் பேட்ஜை அணிவதில் மாணவர்களுக்கு அப்படியென்ன கஷ்டம் – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி

ஷா ஆலாம், மார்ச்.28-

கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்விக்கூட மாணவர்கள் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் தங்கள் சீருடையில் ஜாலுர் கெமிலாங் பேட்ஜ் அணிவது கட்டாயமாக்கப்பபட்டுள்ளது.

எனினும் ஜாலுர் கெமிலாங் பேட்ஜ் அணிவது, கட்டாயமாக்கப்பட்டு இருப்பதை ஒரு நீண்ட விவாதத்திற்குரிய விவகாரமாக ஆக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் தங்கள் சீருடையில் ஜாலுர் கெமிலாங் பேட்ஜ் அணிவதை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இளம் வயதிலேயே மாணவர்கள் மத்தியில் தேசப்பற்றை விதைக்கும் நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.

மாணவர்கள் தங்களின் சீருடையில் அணிவதற்குரிய ஜாலுர் கெமிலாங் பேட்ஜ்ஜை நாங்கள் வழங்குகிறோம். அதனை மாணவர்கள் தங்கள் சீருடையில் அணிந்துக் கொள்வதில் அப்படியென்ன சிரமம் ஏற்பட்டு விடப் போகிறது என்று பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தை ஒரு விவாதப் பொருளாக மாற்ற வேண்டாம் என சம்பந்தப்பட்ட தரப்பினரை தாம் கேட்டுக் கொள்வதாக இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS