கோலாலம்பூர், மார்ச்.28-
தேசிய கலப்பு இரட்டையர் ஜோடியான சென் தாங் ஜீ-தோ ஈ வெய், வரவிருக்கும் போட்டியில் பிரிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது மலேசிய பூப்பந்து சங்கம். இரட்டையர் பயிற்சி இயக்குனர் ரெக்ஸி மைனகி மற்றும் கலப்பு இரட்டையர் தலைமை பயிற்சியாளர் நோவா விடியண்டோ உட்பட பயிற்சி குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அண்மைய செயல்திறன் குழுக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக பிஏஎம் அறிக்கையொன்றில் கூறியது.
புதிய சாத்தியமான இணைக்கு முயற்சிக்க பயிற்சியாளர்களுக்கு நேரம் கொடுக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக் அது குறிப்பிட்டது. கடந்த திங்கட்கிழமை, தாங் ஜீ மற்றும் ஈ வெய் ஆகியோர் தங்களது உறவில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக நோவா தெரிவித்தார்.
உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள அந்த கலப்பு இரட்டையர் ஜோடிக்கு இடையேயான பிரச்சனைகளைத் தீர்க்க அவர்களுக்கு இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்தே அவர்களது உறவில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர்கள் தென் கொரிய ஜோடியான கிம் வோன் ஹோ-ஜியோங் நா யூனிடம் 19-21, 14-21 என்ற கணக்கில் தோற்று காலிறுதியில் வெளியேறினர்.
அண்மையில், 2025 அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈ வெய் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தாங் ஜீயுடனான அனைத்து புகைப்படங்களையும் நீக்கியது குறிப்பிடத்தக்கது.