மியன்மாரிலும் தாய்லாந்திலும் நிலநடுக்கம்

மியன்மார், மார்ச்.28-

மியான்மாரின் மத்தியப் பகுதியில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது தாய்லாந்து தலைநகர் பாங்காக் வரை நில அதிர்வை  ஏற்படுத்தியது. அந்நிலநடுக்கத்தை அடுத்து தாய்லாந்தும் மியான்மாரும் அவசரகால நிலையை அறிவிக்கத்தன. 
 
நகர அதிகாரிகளால் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்ட பாங்காக்கில், பிரபல சதுசாக் சந்தைக்கு அருகில் கட்டுமானத்தில் இருந்த ஓர் உயரமானக் கட்டிடம் இடிந்து விழுந்தது. அச்சம்பவத்தில் குறைந்தது 81 பேர் காணாமல் போயிருக்கின்றனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருக்கலாம் என ஐயுறப்படுகிறது. மூவர் உயிரிழந்திருப்பதாக தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இடிபாடுகளில் இருந்து ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். 
 
சமூக ஊடகங்களில் பரவும் காட்சிகள், கட்டிடம் தூசி மேகமாக இடிந்து விழும்போது பீதியடையும் வகையில் உள்ளன. பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.. 
 
தாய்லாந்து மற்றும் மியான்மரில் குறைந்தது 15 பேர் இறந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆயினும் மருத்துவர் ஒருவர் மியான்மார் தலைநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் குறைந்தது 20 பேர் இறந்துள்ளதாகக் கூறியுள்ளார். 
 
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) படி, இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. அதோடு மியான்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இருந்து சுமார் 17 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 6.4 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. 
 
மியான்மாரில் ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக நேரில் கண்ட இருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். ஆங் பானில் ஒரு ஹோட்டல் இடிந்து விழுந்ததில் மேலும் இரண்டு பேர் இறந்ததாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

WATCH OUR LATEST NEWS