உண்மையை வெளிக்கொணர போராடுவது உறுதி ஜம்ரி

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.28-

உண்மையை வெளிக்கொணர்வதில் தொடர்ந்து போராடப் போவதாக சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்து இன்று சபதம் ஏற்றுள்ளார். தன்னுடைய போராட்டமானது, Lawan tetap lawan என்ற கோட்பாட்டைக் கொண்டதாகும் என்று ஜம்ரி வினோத் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதத்தை அவமதித்ததாகத் தமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்துப் போராடுவதில் தாம் திடமான மன உறுதியுடன் இருப்பதாக ஜம்ரி வினோத் தெரிவித்தார்.

கோலாலம்பூர், தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடம் மாற்ற விவகாரத்தில், ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நிந்தனைத்தன்மையில் விமர்சனங்களை, தனது முகநூலில் பதிவிட்டு, பொது அமைதிக்கு மிரட்டலை ஏற்படுத்தியதற்காக ஜம்ரி வினோத் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலையில் பெர்லிஸ், கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவரை இரண்டு நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.

உண்மைக்காகப் போராட வேண்டும் என்பதே தமக்கு போதிக்கப்பட்ட பாடம் என்று ஜம்ரி வினோத் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஜம்ரி வினோத் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவரது தரப்பில் 10 வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

WATCH OUR LATEST NEWS