வீரப்பன் தலைமையில் “ஓப்ஸ் காகாக்” சோதனை நடவடிக்கை

நீலாய், மார்ச்.29-

பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான அந்நியத் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி இரவு மணியளவில் “ஓப்ஸ் காகாக்” எனும் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நீலாய், பண்டார் நீலாய் உத்தமாவில் உள்ள திறந்த வெளிப்பகுதியில் அமைந்துள்ள அந்நிய நாட்டவர் குடியிருப்புப் பகுதியில் இரவு 9 மணியளவில் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்பிரமணியம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த “ஓப்ஸ் காகாக்” சோதனையில், மாநில ஆள்பல இலாகா, அரச மலேசியப் போலீஸ் படை, சுற்றுச்சூழல் இலாகா, குடிநீர் விநியோக நிறுவனம் மற்றும் டிஎன்பி ஆகிய இலாகாக்களைச் சேர்ந்த 28 அமலாக்க அதிகாரிகள் பங்கு கொண்டனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் முடிவுகளின்படி, தொழிலாளர்களின் இந்த தங்குமிடம் KITACON Sdn Berhad என்ற கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது.

சிலாங்கூர், கிள்ளானைத் தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனம், தொழிலாளர்கள் தங்கும் இடத்திற்கான அனுமதி சான்றிதழை, கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பெற்றது. காலாவதியாகும் நாள் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியாகும்.

ஒரு கொள்கலனின் 4 தொழிலாளர்கள் வீதம் 72 தொழிலாளர்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த விதிமுறையை சம்பந்தப்பட்ட நிறுவனம் மீறி விட்டதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, அனுமதி சான்றிதழ் பெற்ற 7 மாதங்களுக்குள், KITACON Sdn Berhad நிறுவனம், சட்டவிரோதமாக கொள்கலன்களின் எண்ணிக்கையை 30 யூனிட்டுகளாக அதிகரித்ததுள்ளது.

அதுமட்டுமின்றி சட்டவிரோத தொழிலாளர்கள் மற்றும் ஐ.நா. அட்டையை வைத்திருக்கும் அகதிகள் உட்பட 220 பேருக்கு மேல் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததுள்ளதாக வீரப்பன் தெரிவித்தார்.

தவிர, தங்கும் இடத்தின் சுற்றுச்சூழல், குப்பைகள் நிரம்பிய நிலையில் , சுகாதார கேட்டை விளைவிக்கும் அளவிற்கு மிக அசுத்தமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேசமயத்தில், ஆண், பெண் தொழிலாளர்கள் தனித்தனியாக பிரிக்கப்படாமல் அனைவரும் ஒரே இடத்தில் தங்கும் அவல நிலை கண்டறிப்பட்டுள்ளதாக வீரப்பன் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்கள் தங்குவதற்கு ஆள்பல இலாகாவினால் அனுமதி அளிக்கப்பட்ட அங்கீகாரச் சான்றிதழ் நிபந்தனைகளுக்கு ஏற்ப அவர்களுக்கான தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? என்பதை கண்டறிவதே இந்த “OPS GAGAK” சோதனையின் நோக்கமாகும் என்று வீரப்பன் விளக்கினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சான்றிதழை மீட்டுக்கொள்வதற்கு மாநில ஆள்பல இலாகா நடவடிக்கை எடுத்த போதிலும், சான்றிதழை மீட்டுக் கொள்ள வேண்டாம் என்று அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில் அந்த நிறுவனம் சீர்படுத்திக்கொள்ள வேண்டிய சில நிபந்தனைகளை மாநில ஆள்பல இலாகா விதித்து இருப்பதாக வீரப்பன் தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது நெகிரி செம்பிலான் ஆள்பல இலாகாவின் இயக்குநர் ரோஸ்லான் பஹாரி மற்றும் மாநில சுற்றுச்சூழல் இலாகா இயக்குநர் ஹம்சா பின் முகமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS