பேருந்தில் ஏறிய சிறுவன், 11 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டான்

காபிட், மார்ச்.29-

பள்ளிக்குச் செல்லாமல், பெற்றோர்களுக்குத் தெரியாமல் விரைவு பேருந்தில் ஏறிய சிறுவன் ஒருவன், 11 மணி நேரத்திற்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டான். சரவாக், கூச்சிங் பத்து 8, ஜாலான் பென்ரிசெனில் பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு, பேருந்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த 6 ஆம் ஆண்டு மாணவனான 12 வயது சிறுவனைத் தேடும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்ட நிலையில் அந்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக சரவாக், காபிட் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி ரொஹானா நானு தெரிவித்தார்.

இந்த சம்பவம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி சரவாக், கூச்சிங் நகரில் நிகழ்ந்தது. பள்ளிக்குச் செல்லாமல், சுற்றித் திரிந்த அந்த சிறுவன், அன்றிரவு கூச்சிங் பேருந்து முனையத்தில் காப்பிட்டுக்கு புறப்படவிருந்த விரைவு பேருந்து ஒன்றில் ஏறி, இருக்கைகளுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலை 8 மணியளவில் அந்த பேருந்து காபிட் நகரைச் சென்றடைந்தது. அதன் பின்னர் பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து இறங்கினர். பஸ் நிலைய அதிகாரிகள் பேருந்தைச் சோதனையிட்ட போது சிறுவன் உறங்கி கொண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பள்ளிக்குச் சென்ற தங்கள் மகனை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் பொது மக்களின் உதவியுடன் அந்த சிறுவன் காபிட் போலீஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக டிஎஸ்பி ரொஹானா நானு தெரிவித்தார்.

பின்னர் அந்த சிறுவன் பாதுகாப்பாக பெற்றோரிடம் சேர்க்கப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS