பலூன் வியாபாரியைக்கூட விரட்டுவதா? மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்

கோலாலம்பூர், மார்ச்.29-

ஹரிராயா பெருநாள் கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில் விலைவாசிகளின் உயர்வின் மத்தியில் ஏதாவது ஒரு சிறு வியாபாரம் செய்து, குடும்பச் சுமையைக் குறைப்பதற்கு முயற்சிக்கும், வியாபாரிகளிடம் கெடுபிடி போக்கை காட்டும் ஊராட்சிமன்றங்கள் மற்றும் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள், கடந்த சில வாரங்களாக கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஏற்கனவே போர்ட்டிக்சனின் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளில் பெத்தாய் காய்களை விற்பனை செய்து வந்த ஒருவரை வியாபாரம் செய்யாமல் தடுத்தது, அந்த வியாபாரி தனது பெத்தாய் காய்களை அமலாக்க அதிகாரிகளின் கண்முன்னே, சாலையில் தூக்கி எறிந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பின்னர் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹருண் தலையிட்டு, போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் இரவோடு, இரவாக சென்று அந்த பெத்தாய் வியாபாரியிடம் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, இழப்பீட்டுத் தொகையை வழங்கி விட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஆகக் கடைசியாக கோலாலம்பூர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் பகுதியில் பலூன் வியாபாரம் செய்து வந்த ஒரு பலூன் வியாபாரியை மடக்கி, அவரின் பலூன்களைப் பறிமுதல் செய்ததுடன், தனது வாழ்வாதாரத்திற்காகப் போராடும் அந்த பலூன் வியாபாரியை கீழே தள்ளி, பலவந்தமாக நடந்த கொண்ட கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லின் அமலாக்க அதிகாரிகளின் செயலை சமூக வலைத்தளவாசகிகள் கடுமையாக குறைகூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஹரிராயா கொண்டாட்ட குதூகலத்தில் சிறார்களை மகிழ்விக்க பலூன் வியாபாரம் செய்து வந்த ஒருவர், அப்படியென்ன நடைப்பாதைக்கும், சாலை போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி விட்டார் என்று வலைவாசிகள் வினவுகின்றனர்.

நாடு நோன்புப் பெருநாளை வரவேற்க காத்திருக்கும் வேளையில் கண்ணுக்குத் தெரியாமல் அன்றாடக் காட்சியாக 50 ரிங்கிட்டிற்கும், 100 ரிங்கிட்டிற்கும் போராடும் பலூன் வியாபாரிகள் போன்றவர்களிடம் சற்று மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள், சற்று பரிவுகாட்டுங்கள். கெடுபிடி வேண்டாம், சற்று விட்டுக் கொடுங்கள் என்று அமலாக்க அதிகாரிகளுக்கு பலர், காணொளி வழி அறிவுறுத்தி வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS