கோலாலம்பூர், மார்ச்.29-
வரும் ஜுன் மாதத்தில் இலக்கிடப்பட்ட ரோன் 95 பெட்ரோல் மானியத் திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தவிருக்கிறது. அதன் செயலாக்கத்தில் மைகாட் அடையாள அட்டையை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் தொடர்பில் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு அது குறித்து தெளிவாக விளக்கத்தை அளிக்கும்படி அரசாங்கத்திடம் எண்ணெய் நிலையங்கள் கோருகின்றன.
ரோன் 95 பெட்ரோல் சலுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தஓஅடும் போது அடையாளக் கார்டுகளே முக்கியப் பங்காற்றும் என்று 2 ஆவது நிதி அமைச்சர் டத்தோ அமீர் ஹம்ஸா அஸிஸான் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
ஆனால், மைகாட் அடையாள அட்டையைப் பயன்படுத்தும் திட்டம் குறித்து எண்ணெய் நிலையங்களுக்கு இதுவரையில் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று மலேசிய பெட்ரோல் விநியோகிப்பாளர் சங்கமான PDAM இன்று தெரிவித்துள்ளது.
எனினும் அரசாங்கத்தின் இந்த திட்டமும், முயற்சியும் எந்தவொரு இடையூறின்றி சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு இது குறித்து முன்கூட்டியே விளக்கும் அளிக்கும்படி எண்ணெய் நிலையங்கள் நடத்துனர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
காரணம், எண்ணெய் நிரப்புவதற்கு மைகாட் அட்டையை மக்கள் பயன்படுத்த வேண்டுமானால், மைகாட்டை உள்ளீடு செய்வதற்கு தேவையான மாற்றங்களை எண்ணெய் இயந்திரங்கள் வடிவமைப்பில் செய்து கொள்வதற்கு அரசாங்கத்தின் இந்த விளக்கமளிப்பு முக்கியமானதாகும் என்று அந்த சங்கம் கூறுகிறது.