கூலிம், மார்ச்.29
ஆரம்பக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கும் மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் கால் பதிக்கும் சமயத்தில் தமிழ்மொழியைப் புறக்கணிக்காமல் அம்மொழியை ஒரு பாடமாகத் தேர்வுச் செய்து கற்க வேண்டும் என்று கூலிம் ஹய் தேக் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாக உறுப்பினர்களும் தன்முனைப்புச் பேச்சாளர் ஆசிரியர் லிங்கேஸ்வரனும் இடைநிலைப்பள்ளி மாணவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
இன்று காலை 7.30 மணி அளவில் ஸ்ரீ மஹா முத்துமாரியம்மன் ஆலயத்தின் ( சேரா ஆலயம்) மகளிர் பகுதி தலைவி ஜோதிலட்சுமி அவர் தம் குழுவினரின் ஏற்பாட்டில் கூலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள இடைநிலைப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களுக்காக ” வெற்றி நிச்சயம் ” எனும் தன்முனைப்பு நிகழ்வு முற்றிலும் இலவசமாக ஆலயத்தின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இத்தன்முனைப்பு நிகழ்வினை பினாங்கு மாநில இடைநிலைப்பள்ளி ஆசிரியரும் தன்முனைப்பு பேச்சாளருமான லிங்கேஸ்வரன் வழிநடத்தினார்.

மாணவர்களுக்கான தன்முனைப்பு நிகழ்வின் முதல் கட்டமாக சமயத்தின் முக்கியத்துவம் கல்வியின் வளர்ச்சிக்கு அடித்தளம் எனும் கருத்தினை அவ்வாலயத்தின் தலைமை குருக்கள் சிவ ஸ்ரீ சுப்பிரமணியம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் . அதன் பிறகு , பேச்சாளர் லிங்கேஸ்வரன் மாணவர்களுக்கு கல்வி முக்கியத்துவத்தையும் அதே கல்வி ” ஸ்மாடாக” பயிலும் சில முறைகளையும் கற்றுத் தந்தார்.
அதுமட்டுமின்றி , இடைநிலைப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு தேசிய மொழி முக்கியத்துவம் அறிந்துக் கொண்டு அதனை சிறப்பாக மதிப்பெண்களைப் பெறுவதற்கு அதிக அளவில் வாசிப்புப் பயிற்சிகளும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். அதே சமயத்தில் நம் தாய் மொழியான தமிழ்மொழியையும் இடைநிலைப்பள்ளியில் பயில்வதற்கு மாணவர்கள் முன் வரவேண்டும் என மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

மேலும் , தமிழ்ப்பள்ளியும் தமிழ்மொழியும் ஒவ்வொரு மாணவர்களுக்கு நன்னெறியையும் நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரும் என்று கூறிக்கொண்டு ” படித்தால் தான் ஹீரோ, படிக்காவிட்டால் ஜீரோ ” என்ற ஒரு ஸ்லோகனைத் தெரிவித்து தன்முனைப்பு நிகழ்வு முடிவினைக் கண்டது.
இத்தன்முனைப்பு நிகழ்வில் 100 மாணவர்களும் அவ்வாலயத்தின் தலைவர் ரமணி மற்றும் உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.