ரியோ டி ஜெனிரோ, மார்ச்.29-
பரம எதிரியான அர்ஜெண்டினாவுக்கு எதிரான 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தகுதிச் சுற்றில் 4-1 என்ற மோசமானத் தோல்வியைத் தொடர்ந்து பிரேசில் பயிற்சியாளர் டோரிவல் ஜூனியர் பிரேசிலின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு (CBF) ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.
“டோரிவல் ஜூனியர் இனி பிரேசில் தேசிய அணியின் பயிற்சியாளராக இல்லை. நிர்வாகம் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறது மற்றும் அவரது அடுத்த பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறது” என்று CBF தெரிவித்துள்ளது.
62 வயதான டோரிவல் இடைக்கால பயிற்சியாளர் பெர்னாண்டோ டினிசுக்கு பதிலாக 2024 ஜனவரி முதல் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட பெரிய தோல்வி, டோரிவலின் வெளியேற்றத்தின் உறுதியான தருணமாகும்.
“இதுபோன்ற முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை, நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று போட்டிக்குப் பிறகு டோரிவல் கூறினார்.
ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள பிரேசில், ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜெண்டினாவை விட 10 புள்ளிகள் பின்தங்கி, தென் அமெரிக்க தகுதிச் சுற்றில் நான்காவது இடத்தில் உள்ளது. ஈகுவாடோர் மற்றும் உருகுவேயை விட பிரேசில் பின்தங்கியுள்ளது. தென் அமெரிக்காவிலிருந்து வரும் அணிகளுக்கு ஆறு இடங்கள் இயல்பாகவே தகுதி பெற உதவும்.