புதுடெல்லி, மார்ச்.29-
மியான்மாரில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் அந்நாடு உருக்குலைந்து காணப்படுகிறது. அருகில் உள்ள தாய்லாந்தும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மியான்மாரில் மட்டும் 1,600 பேர் உயிரிழந்து உள்ளனர். 3,400 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், ‘ ஆபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் மியான்மாருக்கு நிவாரணப் பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்து உள்ளது. இதன் கீழ், மனிதநேய உதவிக்காக சிறப்பு மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 118 பேர் கொண்ட சத்ருஜீத் பிரிகேட் குழுவினர், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளுடன் மியான்மார் புறப்பட்டுள்ளனர். பேரிடர் பாதித்த பகுதிகளில் மேம்பட்ட மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்க இக்குழு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
இக்குழுவினர் , காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள் கொண்ட மருத்துவ மையத்தை அமைக்கும். இங்கு, பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவசர அறுவை சிகிச்சைகள், அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க உள்ளூர் மருத்துவ குழுவினருடன் இணைந்து செயல்படும் எனவும் கூறியுள்ளது.