சுபாங் ஜெயா, மார்ச்.30-
மியான்மாருக்கு இன்று அனுப்பப்பட்ட 50 பேர் கொண்ட மாந்தநேய உதவி – பேரிடர் நிவாரணக் குழு, அடுத்த ஏழு முதல் 14 நாட்களுக்கு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் இருக்கும் என்று துணைப் பிரதமர் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்தார். மியான்மாரில் உள்ள தேவையைப் பொறுத்து உதவிக்கான காலம் நீடிக்கும் என்று அவர் கூறினார். பிற நாடுகளின் குழுக்களும் ஈடுபட்டிருக்கும் தேடல் – மீட்புப் பணியை இந்த உதவி விரைவுபடுத்தும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். சுபாங் விமானப்படை தளத்தில் மியான்மார் நிலநடுக்க மாந்தநேய உதவி பயணத் திட்டத்திற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
இந்த குழு இரண்டு ஐந்து டன் லாரிகள், மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் 33 டன் பொருட்களைக் கொண்டுச் செல்கிறது. தேவைக்கேற்ப குழு உறுப்பினர்களின் எந்தவோர் அதிகரிப்பும் திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்படும். மியான்மாரில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ குடும்பத்துடன் ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்தை ‘தியாகம்’ செய்யத் தயாராக இருக்கும் குழு உறுப்பினர்களுக்கு அரசாங்கம் கூடுதல் சலுகைகளைப் பரிசீலிக்கும் என்று ஸாஹிட் மேலும் கூறினார்.