கோலாலம்பூர், மார்ச்.30-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோவிட்-19 தொற்றுநோய் தாக்கிய போது, வாடிக்கையாளர்களால் நிரம்பிய உணவகங்கள் வெறிச்சோடியும் அமைதியாகவும் இருந்தன. குறிப்பாக ஈகைப் பெருநாள் போன்ற பண்டிகை நாட்களில் ஆரவாரமே இல்லாமல் இருந்தது. இது மறக்க முடியாத சோகமான நினைவுகளில் ஒன்றாகும். கோவிட்-19 தொற்றுநோயின் போது பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பிரஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் டத்தோ ஜவஹார் அலி தயிப் கான், உணவகத் துறையில் அதன் தாக்கம் இன்றுவரை உணரப்படுகிறது என்றார். இது நாடு முழுவதும் உள்ள உரிமையாளர்களுக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக மாறியுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முதல் இன்று வரை, பிரஸ்மா உறுப்பினர்களுக்குச் சொந்தமான 2,300 க்கும் மேற்பட்ட உணவகங்கள் அன்றாடச் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வணிக நடவடிக்கைகள் குறைந்தபட்ச அளவில் நடந்தாலும், அனைத்து உணவக நிறுவனங்களில் உள்ள 400 ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைப்பதை உறுதிச் செய்வதற்காக, தனது சொந்த சேமிப்பு அனைத்தையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
தங்களைப் பொறுத்தவரை, தொற்றுநோய் போன்ற முக்கியமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஒரு குறிப்பிட்ட அளவு சேமிப்பு இருக்க வேண்டும் என்பதே மிகப் பெரிய பாடமாகும். பல உணவக உரிமையாளர்கள் இவ்வாறான மிகவும் வேதனையான கட்டத்தை கடந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இஃது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவும், வாழ்வாதாரமாக இருந்த வணிகங்களை மூடவும் வழிவகுத்தது. உணவகங்களில் அன்றாடம் சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி சேவை ஒரு மாற்றாக மாறியது இன்னும் நினைவிருக்கிறது. பிகேபி தளர்த்தப்பட்டபோது, உடல் வெப்பநிலையை அளக்க வேண்டியிருந்தது, பதிவு செய்ய வேண்டியிருந்தது, கிருமிநாசினி பயன்படுத்த வேண்டியிருந்தது. பல நடைமுறைகள் தொந்தரவாக இருந்தன, ஆனால் அவை அனைவருக்கும் சிறந்தவை. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வளாகங்களில் சுகாதார அளவை அதிகரிக்கும் வழக்கம், எதிர்காலத்தில் இதுபோன்ற பொது சுகாதார நிலைப் பாதிப்பு மீண்டும் ஏற்படும் என்று இன்னும் கவலைப்படும் பிரஸ்மா உறுப்பினர்களின் நடைமுறையாகத் தொடர்கிறது. வளாக வாடகை, தொழிலாளர் ஊதியம், வங்கிக் கடன்கள் போன்ற அதிக செலவுகள் காரணமாக, இன்னும் பலர் மீண்டெழ முயற்சி செய்கிறார்கள், சிலர் வணிகத்தை நிரந்தரமாக மூடிவிட்டனர் என்றார் டத்தோ ஜவஹார் அலி.